நம்ம ஊருல தமிழர்களோட கட்டடக்கலை சிறப்பு என்னன்னு கேட்டா எல்லாரும், யோசிக்காம, எந்தவொரு தயக்கமும் இல்லாம சொல்றது தஞ்சாவூர் பெரிய கோயில் தான். அதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம், உலகளவில் பிரசித்திப்பெற்ற கம்போடியாவுல இருக்க அங்கர்வாட் கோயில் தான். இலக்கியங்கள், புராணங்கள் படிக்குற, உலகம் சுற்றும் வாலிபர்களா இருந்தா இன்னும் சில கோயிலோட பேரு வரும்.
கோயிலைத் தாண்டி அப்போ தமிழன் எதையுமே கட்டவே இல்லையான்னு கேட்டா ஏன் இல்ல, எந்த நவீன இயந்திரமும் இல்லாம கரிகாலன் கல்லணைய கட்டலையா? அந்த அணை இன்னைக்கு வரைக்கும் உலகம் வியந்து பாக்குற ஒரு அதிசயம் தான அப்படின்னும் ஒரு பதில் வரும். ஆனா நாம சொல்ற எல்லா கட்டட அமைப்புகளுமே அரசர்களுக்காக, மக்களோட பொது பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது தான். பொது உபயோகத்திற்காக ஒரு இனம் தன்னோட அறிவு நுட்பத்தை இவ்ளோ தூரம் செலவழிக்க முடியும்ன்னு சொன்னா, தன்னோட வாழ்வியலோட அடிப்படைய உணர வைக்குற சமுதாய அமைப்பையும், தங்களுக்கான வாழிடங்களையும் எந்தளவிற்கு நுட்பமா கட்டியிருப்பாங்க.
நம்மளோட சின்ன வயசுல இருந்தே திராவிட மக்கள் ( பண்டைய தமிழகம்) சிந்து சமவெளி நாகரிக காலத்துல இருந்தே கட்டுமான திறமையை உலகுக்கு காட்டிட்டு வருதுன்னு படிக்குறோம். இப்போ இருக்க மாதிரி ஒரு கட்டடம் கட்டுறதுக்கு சிமெண்ட் தேவைப்படல, தட்டுப்பாடு ஏற்படுற அளவிக்கு மணலும் தேவைப்படல. தன்னோட சூழ்நிலைக்கேற்ற அமைப்புலதான் அவங்க கட்டமைப்பு இருந்தது. சுண்ணாம்பையும் கல்லையும் மட்டுமே வச்சு இங்க பல ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டிருக்கு.
கி.மு. 300ஆம் ஆண்டுல கட்டப்பட்ட ஆதித் தமிழர்களோட கட்டடங்கள் தான் இன்றைக்கும் நகர கட்டமைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு. முறையான அமைப்பில் வீடுகள் , தெருக்கள், பொதுக்கிணறுகள், குளிப்பதற்கு தனியான அறை, குளங்களில் வடிகால் அமைப்பு, தானிய சேமிப்புக்கிடங்கு, பாதுகாப்பு மதில்கள் என எடுத்துக்காட்டுகளும் ஏராளம்.
நம்மோட பாடப்புத்தகத்துல மனிதன் நீர் நிலைகளை ஒட்டித்தான் தன்னோட வாழ்வியலை கட்டமைப்பதாக சொல்றாங்க. ஆனா, பெரும்பாலான மக்கள், இயற்கை வனப்புகளை சார்ந்தே தன்னோட நிலப்பரப்பை தேர்ந்தெடுக்குறாங்க.
தனக்குண்டான உணவுப் பொருட்களை காடு, மலைப்பகுதிகளில் இருந்தே மக்கள் பெற்று வந்தாங்க. காடுகளில் இருந்தும், மலைகளில் இருந்தும், இடம்பெயர்ந்தவங்க தான் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்து வந்தாங்க. இந்த இடம் பெயர்ந்த மக்கள் தான் விஞ்ஞானம் வளரவும் அடிப்படையா இருந்தாங்க.
மேற்கத்திய கலாச்சாரங்கள் சூழ்ந்த நகரப் பகுதியில வாழ்ந்த மக்களுக்கு, தன்னோட கலாச்சாரத்த இன்னைக்கு வரைக்கும் மாத்தாம, ஒரு குழுவா, அதே பழைய வாழ்வியல் முறைகளோட இருக்குற மக்களை அருங்காட்சியகத்துல இருக்க அதிசயப்பொருளா பாக்குற நிலைதான் இன்னைக்கு இருக்கு. பழங்குடியின மக்களுக்கான ஆதிவாசி அடைமொழி , மக்கள் மத்தியில அவங்கள இலை தளையோட கருப்பான உருவம், நீளமான முடி, கூரிய ஆயதங்களோட சினிமாவுல வர டார்சன் மாதிரி மரத்துக்கு மரம் தாவுர காட்சிகளை சித்தரிக்கும் எண்ணத்துக்கு நம்மை தள்ளுது.
ஆனா, இந்த இருபத்தோராம் நூற்றாண்டுல நம்மளோட கற்பனை பிம்பங்களை உடைக்குற மாதிரி ஆதிவாசிகள், பொருளாதார அளவுலையும், கல்வி அறிவுலயும் முன்னோக்கி சென்றுகொண்டே இருக்காங்க. அரசாங்கத்தின் உயர் பதவியில் கூட அவங்க இருக்காங்க. மாறி வரும் கலாச்சாரமும், மேற்கத்திய நாகரிகமும் நம்மையும், நம் பண்பாட்டையும் திசைத்திருப்பிக்கொண்டிருக்கிறது. நாம் பெருமை பேசிய கலாச்சாரங்கள் எல்லாம் கணினிமயமாக்கப்பட்டு நிஜத்தில் காணாமல் போய்விட்டன.
இப்படி சிறிது சிறிதாக காணாமல் போய்க்கொண்டிருக்கும் கலாச்சாரங்களையும், கட்டுமான சிறப்புகளையும் ஆராயும் முயற்சியில் இறங்கியுள்ளது அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மார்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்டு ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் கட்டுமானக்கலை பயிலும் மாணவர்கள் குழு மதுரை மாவட்டத்தின் மிகவும் தொன்மையான அரிட்டாபட்டி கிராமத்தில் நகரக் கட்டமைப்புக் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில் ஊரின் அனைத்து எல்லைப் பகுதிகள், மலைகள், வயல்வெளிகள், தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளை ஆராய்ந்து, வரைபடமாக்கி கட்டடங்களின் தொடக்கம் மற்றும் தற்போதைய நிலை குறித்து ஆய்வுகளும், விவாதங்களும் நடத்தி வருகின்றனர். ஆர்க்கிடெக்ட் 2-ஆம் மாணவி ஆண்டு பயிலும் பிரதீபா, 'கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடும் எவ்வாறு அமைந்துள்ளது? வட்டவடிவமாக இருந்த கட்டமைப்புகளெல்லாம் காலப்போக்கில் சதுர வடிவமாக ஏன் மாற்றம் கண்டன? கடந்த ஐந்து நாட்களாக இந்த ஆய்வுகளை நடத்தி வருகிறோம். அதேபோன்று அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர் போன்றவை குறித்தும் ஆய்வு நடத்தியுள்ளோம்' என்றார்.
மாணவர் ஹசன் கூறுகையில், 'அரிட்டநேமி என்ற சமணத்துறவியின் பெயரால் இந்த ஊர் காலப்போக்கில் அரிட்டாபட்டி என மாறியுள்ளது. இங்குள்ள களிஞச் மலைத் தொடரைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. பல்லுயிர்ச்சூழலுக்கு மிகச் சிறந்த கிராமமாக அரிட்டாபட்டி அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் மட்டும் கும்மியாடுகின்ற வழக்கம் அனைத்து ஊர்களிலும் உண்டு. ஆனால் இங்கு மட்டும் ஆண்களும் கும்மிக்கலையை நிகழ்த்துகின்றனர். தொடக்கத்தில் வட்டவடிவமாக வீடுகளை அமைத்திருக்கின்றனர். மலைத்தொடர்களின் காரணமாக உருவாகும் காற்றின் வேகத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக தங்களின் வாழ்விடங்களை வட்டவடிமாகவும் வெறும் ஐந்தடி உயரத்திலும் அமைத்துள்ளனர் என்பதை ஆய்வின் மூலமாகக் கண்டோம்' என்றார்.
மாணவி யோகேஷ்வரி கூறுகையில், 'எங்களது படிப்பின் ஒரு பகுதிதான் இந்த ஆய்வு. கிராமப்புறங்களில் உள்ள பண்பாடு, பாரம்பரியம், வீடு மற்றும் நகரக் கட்டமைப்புக் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி கிராமத்தைச் தேர்வு செய்தோம். இவ்வூரின் அனைத்து எல்லைப் பகுதிகள், மலைகள், வயல்வெளிகள், தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளை ஆராய்ந்து, அவற்றை வரைபடமாக்கியுள்ளோம்' என்றார்.
மாணவி சசிரேகா கூறுகையில், 'ஒவ்வொரு கிராமங்களிலுள்ள நிறைகளைக் குறித்து பயிலும் நாங்கள், அங்குள்ள குறைகளையும் ஆய்வு செய்வது வழக்கம். அவ்வகையில் போதுமான மருத்துவ வசதியும், கல்வி வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீரால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதனை ஊராட்சி அலுவலர்கள் சரி செய்துத் தர வேண்டும்' என்றார்.
பேராசிரியை அழகுராணி கூறுகையில், 'கட்டட அமைப்புக் கலை குறித்த அண்ணா பல்கலைக்கழகம் வரையறுத்துள்ள பாடத்திட்டத்தின்படி, கிராமங்கள் குறித்து பயில்வதுதான் இந்தக் கல்விச் சுற்றுலாவின் நோக்கம். ஒரு கிராமத்தின் வாழ்வியலைத் தீர்மானிக்கும் வேலைவாய்ப்பு, கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், பண்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மதுரை மாவட்டத்திலுள்ள இந்தப் பழமையான அரிட்டாபட்டி கிராமத்தைத் தேர்ந்தெடுத்தோம். தங்களின் ஆய்வின் மூலமாக கண்டறிந்தவற்றை ஓவியமாக்கி, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவியர் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். தங்களின் ஆய்வுகளையும், மக்களின் பண்டைய வாழ்வியல் முறைகளையும் பொதுமக்களுக்கு இவர்கள் விளக்கினர்.
இந்த ஆய்வுகள் மாணவர்களின் கல்வியறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் மக்களால் மறக்கப்பட்ட வாழ்வியல் முறைகளை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவும் இது அமையும்.