மதுரை: ஆவின் பணி நியமன தேர்வு தொடர்பாக, விருதுநகரைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி, சுமதி உட்பட 41 நபர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், "விருதுநகர் ஆவினில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019ல் வெளியானது. நாங்கள் அந்த பணிக்கு விண்ணப்பித்தோம். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பணியில் 2021 முதல் சேர்ந்து பணியாற்றி வருகிறோம். விருதுநகர் ஆவினில் மேற்கொள்ளப்பட்ட நேரடி பணி நியமனங்கள் விதிகளை பின்பற்றாமல் பணி ஆணைகள் வழங்கப்பட்டதாகக் கூறி, அந்த பணி நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து ஆவின் நிர்வாகம் பணி நியமனத்தை ரத்து செய்துள்ளது.
மேலும், ஆவின் நிர்வாகத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, எங்களை மீண்டும் பணியில் சேர்த்து, பணிமூப்பு மற்றும் பணி தொடர்ச்சி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்." என அந்த மனுவில் கூறியிருந்தார். இதே போல், திருச்சி ஆவினில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும், மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்கையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டு, வெளிப்படையாக தேர்வு முகமை மூலம் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்த மனுவில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும், ஆவின் நிர்வாகத்தின் உத்தரவையும், ரத்து செய்து, எங்களை மீண்டும் பணியில் சேர்த்து, பணிமூப்பு மற்றும் பணி தொடர்ச்சி வழங்குமாறு உத்தரவிட வேண்டும். என பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ஆவின் பணி நியமனத்திற்கு தேர்வு நடத்திய பல்கலைக்கழங்களை நீதிமன்றமே முன் வந்து வழக்கில் சேர்த்தது எனவும், தேர்வு நடத்திய முறை குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரம் ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ஈரோடு கால்நடை சந்தையில் வரிசை கட்டி நிற்கும் மன்னர் கால குதிரைகள் மற்றும் ஓங்கோல் இன மாடுகள்!