மதுரை மாவட்டம், மேலூர் அருகே எட்டி மங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்," மதுரை அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் சித்திரை மாத உற்சவம் மற்றும் ஆடி பிரமோற்சவம் திருவிழா புகழ்பெற்றது.
மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆடி பிரமோற்சவ விழாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக கோயிலுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
எனவே முழு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அழகர்கோயிலில் முழுநிலவு நாளில் ஆடித் தேரோட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்"என கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டனர். தற்போது கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுவது அவசியமானது என்பதால், இம்மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.