மதுரை : கன்னியாகுமரியை சேர்ந்த செலஸ்டின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், "கன்னியாகுமரி தேரூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வன ஊழியராக பணியாற்றி இருந்தார். இவரது மனைவி யோகேஸ்வரி. கணவன் - மனைவி இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு ஒரு திருமண வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது தேரூர் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 14 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும் 12 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இருந்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்கும் நாகர்கோவில் சிபிசிஐடி போலீசார் 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் மனுதாரர் சட்டபடி உரிய நடவடிக்கை தொடரலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 12வது முறையாக நீட்டிப்பு!