திருநெல்வேலியை சேர்ந்த சுந்தரவேல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது தாமிரபரணி. தாமிரபரணி ஆற்று நீரால், தூத்துக்குடி , நெல்லை மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் சில பகுதியில் தொழிற்சாலைக் கழிவு நீர் கலக்கிறது. இதனால், தாமிரபரணி ஆறு முழுவதுமாக மாசடைந்துள்ளது. எனவே அதனை குடிநீராக பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் ஆற்றங்கரை ஓரங்களில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளியேறும் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. எனவே தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீரை மறுசுழற்சி செய்யவும், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு சார்பாக நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கறிஞரின் கையொப்பம், பெயர் உள்ளிட்டவை இல்லை. இதையடுத்து, அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நெல்லை தாமிரபரணி ஆற்றை நம் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால், எதிர்காலத்தில் தாமிரபரணி ஆற்றை வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும். தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க திருநெல்வேலி மாநகராட்சி ஆணையரை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.