மதுரை: மதுரையின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பொங்கலை முன்னிட்டு அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு அதனடிப்படையில் மேற்கண்ட மூன்று ஊர்களில் விழாக் குழுக்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு மட்டுமின்றி இரவு நேர ஊரடங்கையும் அறிவித்துள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும் 15ஆம் தேதி பாலமேட்டிலும் 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதற்கான விழா அழைப்பிதழ் முதற்கொண்டு தொடக்க ஏற்பாடுகளை அந்தந்த ஊர் விழாக் குழுக்கள் மேற்கொண்டுவந்தன.
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை நிறுத்த சொன்ன மதுரை மாநகராட்சி
மேலும் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என உறுதிபடக் கூறிவந்தார். இந்நிலையில் ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக அப்பகுதிகளில் சவுக்கு கட்டைகள் ஊன்றும் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மதுரை மாநகராட்சி அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி நிர்வாகம், பொது சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து மேற்கொள்ள வேண்டிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தற்போது நடைபெறுமா, நடைபெறாதா! என்ற குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்குப் பின்னரே மேற்கண்ட மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து முடிவுசெய்யப்படும் என மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு
ஒருபுறம் பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை நடத்துவது என்றும், மற்றொருபுறம் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மதுரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையே, பிற முக்கியக் கட்சிகள் எவையும் ஜல்லிக்கட்டு குறித்து எந்தவிதமான கோரிக்கைகளும் வைக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது சந்தேகமாகவே உள்ளது என்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் பிரமுகர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் கால அவகாசம் உள்ள நிலையில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க அவசியமில்லை. ஆகையால் தமிழ்நாடு அரசு பழகுகின்ற ஆலோசனையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து முடிவுசெய்யப்படும் எனவும் மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி?