மதுரை: இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள 500 இந்திய இளைஞர்கள் ஒருங்கிணைத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல துறைகளைச் சார்ந்த முன்மாதிரி நபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சந்தித்து உறவாடும் வகையில் 15 நாட்கள் ரயில் பயணமாகக் கடந்த டிசம்பர் 24-ஆம் நாள் மும்பையிலிருந்து புறப்பட்ட 'ஜாக்ரிதி யாத்ரா' குழுவினர் இன்று மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
யாத்ரா குழுவின் முதன்மை நிர்வாகி அசுதோஷ் குமார் கூறுகையில், 'சமூகத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு மாற்றத்தைக் கொண்டு வரும் இளைஞர்களைக் கொண்ட ஓர் அமைப்பே ஜாக்ரிதி யாத்ரா. தொழில் முனைவில் ஆர்வம் கொண்டுள்ள திறமையான இளைஞர்கள் 500 பேர் இந்த யாத்ராவில் பங்கெடுத்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள முன்மாதிரியான (ரோல் மாடல்) நபர்களைச் சந்தித்து உரையாடுவதுடன், பல்வேறு தொழில் மற்றும் சமூக அமைப்புகளையும் பார்வையிடுவதன் மூலம் கற்றுக் கொள்வதற்கும் இந்த பயணம் நல் வாய்ப்பாகும். இந்தப் பயணத்தின்போது கலந்துரையாடல்கள், போட்டிகள் ஆகியவற்றிலும் இந்த இளைஞர்கள் பங்கு பெறுகின்றனர்.
இவர்களில் 40 விழுக்காட்டினர் இளம் பெண்களாவர். இதில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் தாங்கள் கற்றுக் கொண்டவற்றை தங்களது சமூகங்களில் செயல்படுத்திக் காட்டுவதன் மூலம் இந்தியாவைப் புத்தெழுச்சி மிக்கதாக எதிர்காலத்தில் மாற்றக்கூடிய தூண்டுகோலாக இருப்பர்' என்றார்.
மும்பை, கன்னியாகுமரி, மதுரை, பெங்களூரு, சென்னை, விசாகப்பட்டினம், பெர்ஹாம்பூர், ராஜ்கிர், தியோரியா, டெல்லி, டிலோனியா, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்குச் சென்று ஜனவரி 8-ஆம் நாள் புறப்பட்ட இடமான மும்பையைச் சென்றடைகின்றனர்.
இதையடுத்து மதுரையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களை ஜாக்ரிதி யாத்ரா குழுவினர் சந்தித்து உரையாடினர். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் துளசிராஜ் கூறுகையில், ஜாக்ரிதி யாத்ரா அமைப்புடன் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பு உண்டு.
பார்வைக்குறைபாடு மற்றும் பார்வையற்ற மக்களுக்காக அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. அதன் சமூகப் பங்களிப்பு குறித்து ஜாக்ரிதி யாத்திரையில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநபர்களின் எந்தவித நன்கொடையுமின்றி மருத்துவமனை நிர்வாகத்தின் நிதி மேலாண்மை குறித்து அவர்கள் தெரிந்து கொண்டனர்.
கண் தொடர்பான பிரச்சனைகளைப் பொறுத்தவரை 40 விழுக்காடு பங்களிப்பைத் தமிழ்நாட்டில் அரவிந்த் கண் மருத்துவமனையே வழங்குகிறது. எங்களது நவீன தொழில்நுட்ப பயன்பாடு குறித்தும் இந்த இளைஞர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். மதுரையைப் பொறுத்தவரை இந்த பயணம் யாத்திரை மேற்கொண்டுள்ள இளைஞர்களுக்கு பெரும் பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன்' என்றார்.
இதையும் படிங்க:பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை போக்குவரத்து ரத்து - காரணம் என்ன?