இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டாம் குத்து’. அடல்ட், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் ஜெயக்குமாரே நாயகனாகவும் நடித்திருந்தார்.
இவருடன் அக்ரிதி சிங், டேனியல், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரில் சமூகத்தைச் சீர்குலைக்கும்விதமாக பல வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், சில வசனங்கள் இரட்டை அர்த்தத்தில் உள்ளன என சமூக வலைவளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் 'A' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், 'இரண்டாம் குத்து' திரைப்படத்தை திரையிட தடைவிதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரியும் மதுரையைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் இந்தப் படத்திற்கு "A" சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி கூறும்போது, படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த டீசரில் இரட்டை அர்த்தங்களுடன் நாகரிகமற்ற முறையில் காட்சிகள் அமைந்துள்ளன. இதுபோல டீசர்கள் குற்றங்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த டீசரை அனைத்து சமூக வலைதளங்கள், ஊடகங்களிலிருந்து நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு உள்துறைச் செயலர், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர், படத்தின் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.