மதுரை: அலுவலகப் பயன்பாட்டிற்காக கட்டடம் கட்டி முறைகேடாகப் பயன்படுத்துவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கட்டடத்தை இடிக்குமாறு பஞ்சாயத்து சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு தாலுகா குமரன்குடியைச் சேர்ந்த சில்வின்ஸ் தாக்கல் செய்த மனுவில், "குமரன்குடியில் திருஇருதய மலன்கரை கத்தோலிக்க ஆலயம் உள்ளது.
இப்பகுதியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் வழிபட்டு வருகின்றனர். ஆலயத்தின் சார்பில், சர்ச்சினை ஒட்டிய பகுதியில் 3 சென்ட் இடம் விலைக்கு வாங்கி அலுவலகம் கட்டினோம்.
பஞ்சாயத்தின் முறையான அனுமதி பெற்று ஆர்.சி.சி கூரையுடன் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நிர்வாகிகள் கூட்டம் கூடுவதற்காகவும், அலுவலக பயன்பாட்டிற்கும் மட்டுமே அதனை பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால், மாற்று சமுதாயத்தினர் இடத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக பஞ்சாயத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் உள்ளூர் பஞ்சாயத்தில் முறையாக விசாரிக்காமல், அலுவலக கட்டடத்தை ஏழு நாட்களுக்குள் இடிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, பஞ்சாயத்தினர் அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தனர். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் அலுவலகப் பயன்பாட்டிற்கு மட்டுமே அலுவலகம் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், அலுவலகத்தை இடிக்க பஞ்சாயத்து சார்பாக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிக்கலாமே:முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பிணை மனு தள்ளுபடி