மதுரை: தமிழ்நாட்டில் தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும், கடும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முகமைகளான கிரைம் பிராஞ்ச், கோச்சடை, காளவாசல் உள்ளிட்ட சுமார் ஆறுக்கும் மேற்பட்ட பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் ரூ.100-க்கு நிரப்புவோருக்கு, 100 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெட்ரோல் நிரப்பவரும் வாடிக்கையாளர் தனது செல்போன் எண்ணை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் பின்னர் கிடைக்கப் பெறும் OTPயை (ஒரு முறை கடவுச்சொல்) பங்க் ஊழியர்களிடம் தெரிவிக்கும்பட்சத்தில், அவர்கள் கூப்பன் முறையில் 100 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு அதை பெட்ரோல் நிலையத்தில் வழங்கி வாகனங்களில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இந்தியன் ஆயில் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு மேற்கொண்டுள்ள முயற்சியாக அந்நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தலா ஒரு பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் 200 முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு இந்த அதிரடி தள்ளுபடி சலுகை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை - அவதியில் வாகன ஓட்டிகள்