மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள பெரிய மறவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காளியப்பன், சுப்புலட்சுமி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரியும் காளியப்பன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (ஆக.24) காலை கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது காளியப்பன் தனது மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க முற்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுப்புலட்சுமி தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டார். பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து திருமங்கலம் மருத்துவமனையில் சுப்புலட்சுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் காவல் துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக, தப்பியோடிய காளிப்பனைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசைகாட்டி 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது