2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் தங்கி இருந்தபொழுது மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி ஓமலூரைச் சேர்ந்த கலா, சந்திரா கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தங்களுக்கு பிணை வழங்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், "நாங்கள் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் தங்கி இருந்தபொழுது மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி எங்களை கைது செய்தனர். 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளோம்.
எங்கள் மீதான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள எங்களுக்கு பிணை வழங்கக்கோரி கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை பிணை வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் இருவருக்கும் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணைக்காக வழக்கை வருகிற டிசம்பர் 16ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: