மதுரை: அதிமுகவின் பொருளாளர் சீனிவாசன், உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தில் இருக்கும், அவரது திருவுருவ சிலைக்கு தங்க கவசத்தை அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். குருபூஜையொட்டி சில நாள்கள் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்தக் கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதற்காக அதிமுக மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்க கவசம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார்.
தற்போது அவர் அதிமுகவில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்க கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமைக் கோர முடியாது. எனவே வருகிற 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, வங்கி லாக்கரில் உள்ள தங்க கவசத்தை தற்போதைய அதிமுக பொருளாளர் சீனிவாசன் வசம் ஒப்படைக்க, வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (அக்.06) விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் பெருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என வாதாடினார்.
அதை மறுத்த நீதிபதி, ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும், வருகிற 10ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது, அதற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.