மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி, முத்துக்குமார் ஆகிய இருவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "2018 டிசம்பர் 26ஆம் தேதி ஹெச்.ஐ.வி. தொற்றுகொண்ட ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகாசி மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்ட ரத்தம் முறையாகப் பரிசோதிக்கப்படாததே இதுபோன்ற நிகழ்வு நடைபெறக் காரணம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் எட்டு லட்சம் நபர்களால், தானமாக அளிக்கப்படும் ரத்தம், ரத்தசோகையால் பாதிக்கப்பட்டபெண்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்து கொள்வோர், வயதானவர்கள் என 12 லட்சம் நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்வாறு தானமாக வழங்கப்படும் ரத்தம் ஹெச்.ஐ.வி., மஞ்சள் காமாலை, மலேரியா, சிபிலிஸ் ஆகிய நோய்த் தொற்றுவைரஸ் உள்ளதா என பரிசோதிக்கப்பட வேண்டும். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநரின் கண்காணிப்பின் கீழ் முறையாகப் பரிசோதிக்கப்பட்டு ரத்தம் தானமாகப்பெறப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்தப் பணியிடம் காலியாகவேஉள்ளது.
பாதுகாப்பான முறையில் ரத்தம் மாற்று செய்வதற்கான உபகரணங்களை வழங்கவும், தமிழ்நாடு முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். எய்ட்ஸ் தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையான சிகிச்சையும், உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்.
ரத்த மாற்றுச் சிகிச்சை மூலமாக ஹெச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவும், ரத்த மாற்று சிகிச்சையைப் பாதுகாப்பானதாக மேற்கொள்ளத் தேவையான உபகரணங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தவும், மக்களின் நலன் கருதி தானமாகப் பெறப்படும் ரத்தத்தைப் பாதுகாப்பானதாகப்பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விருதுநகர் பெண் திங்கள்கிழமை ( மார்ச் 25ஆம்) மாலை நான்கு மணிக்கு நீதிபதிகள் அறையில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.