மதுரை: மதுரையைச் சேர்ந்த முத்து சோமசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ஊ இருந்தார். அதில், "சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கோரக்கநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் மிகவும் பழமையான நூற்றாண்டுகள் கடந்த கோயில் ஆகும். இந்தக் கோயிலில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் தொடர்ந்து அறங்காவலராக இருந்து வந்தனர். இந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மேற்பார்வையில் கோயில் இருந்து வருகிறது.
இந்த கோயிலின் வரவு செலவு கணக்கு மதுரையில் உள்ள தனியார் வங்கியில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சந்திரன் மற்றும் அவரது மகன் பாபு மீது இருவரும் இணைந்து, கடந்த 2021ஆம் ஆண்டு இந்த வங்கிக் கணக்கை மூடிவிட்டு, அதில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை சட்ட விரோதமாக எடுத்து உள்ளனர்.
கோயில் பணத்தை எடுத்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோயில் பணத்தை சட்டவிரோதமாக எடுத்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று(ஜூலை 13) நீதிபதி பிடி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "முறைகேடு புகார் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இருதரப்பினரையும் தனித்தனியே அழைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், எட்டு வாரங்களில் விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் முறைகேடுகள் நடந்து வருவதாக வழக்குகள் தொடரப்படுகின்றன. முன்னதாக, விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை கோரி, அக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.