மதுரை : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்து காவல்துறையினர் என்னை கடுமையாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் என்னுடைய 4 பற்கள் உடைக்கப்பட்டன. இதில் என்னை மட்டுமன்றி என்னுடன் விசாரணை கைதிகள் சிலரது பற்களையும் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார். இதைத் தொடர்ந்து என்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எனவே இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான CCTV காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியரின் விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனு இன்று (டிச. 1) நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க வேண்டும், அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்து 3 மாதங்களுக்கு மேலாகியும் அரசுத் தரப்பில் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இன்னும் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை" என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, "அரசு பதில் மனு தாக்கல் செய்வதில் காலதாமதமாக்குவது ஏன்?. தாமதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் இதுகுஇறித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆளுநரும், முதலமைச்சரும் அமர்ந்து பேச வேண்டும்: மசோதாக்கள் நிலுவை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!