மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி இன்று (நவ. 25) ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது புத்தகம், குழந்தைகள் மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள் என நீதிபதிகள் கூறினர். தங்களை அழைத்து வந்ததில் சிரமம் இருந்ததா என சுவாதியிடம் நீதிபதிகள் கேட்டனர். அனைத்து பாதுகாப்பும் சரியாக இருந்ததாக சுவாதி தெரிவித்தார்.
கோகுல்ராஜ் தங்களுடன் படித்தாரா? சக மாணவர்களிடம் பேசுவது போல் கோகுல்ராஜ் உடன் பேசுவீர்களா என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு ஆமாம் பேசுவேன், ஆனால் கோகுல்ராஜ் பின்னணி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
23-6-2015 அன்று காலை கோகுல்ராஜை பார்த்தீர்களா? என நீதிபதிகள் கேட்டனர். பார்க்கவில்லை என சுவாதி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கோயில் சிசிடிவி காட்சியை நீதிபதிகள் காண்பித்து விசாரணை நடத்தினர். வீடியோ பதிவை காட்டி அது யார் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு சுவாதி அது யார் என தெரியவில்லை என்றார். இதற்கு கோபம் அடைந்த நீதிபதிகள் உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பினர்.
மீண்டும் இரண்டு முறை வீடியோவை காண்பித்தும், அது தான் இல்லை என தொடர்ச்சியாக சுவாதி பதிலளித்தார். கோகுல்ராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் சுவாதி வேண்டுமென்று பொய் கூறுவதாக தெரிவித்தனர். இதற்கு நீதிபதிகள் 165 சட்டப்பிரிவின்படி தங்களுக்கு விசாரணை மேற்கொள்வதற்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே இருதரப்பினரும் அமைதியாக இருக்கும்படி நீதிபதிகள் கூறினர்.
சிசிடிவியில் சுவாதி நடந்து வரும் 10.55 நிமிட காட்சியை காண்பித்து அது யார் என நீதிபதிகள் கேள்வி கேட்டும், சுவாதி அது தான் இல்லை என மறுத்துவிட்டார். ஆனால் அருகில் செல்லக்கூடிய ஆண் யார் என்ற கேள்விக்கு மட்டும், அது கோகுல்ராஜ் போல் உள்ளது என பதிலளித்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
இருப்பினும், முகம் சரியாக தெரியவில்லை என சுவாதி தெரிவித்தார். அப்போது முகம் சரியாக தெரிந்தால் பதில் கூறுவீர்களா? என தெரிவித்து, மீண்டும் முகம் தெரிவது போன்ற சிசிடிவி காட்சியை சுவாதியிடம் நீதிபதிகள் காண்பித்தனர். இந்நிகழ்வின்போது நீதிமன்றத்தில் சுவாதி கண்கலங்கி வாக்குமூலம் அளித்தார்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளரின் வைரல் வீடியோ!