மதுரை: தமிழ்நாட்டில் உள்ள தென்மாவட்டங்களின் மருத்துவ வரலாற்றில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்பதன் அடிப்படையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று முடிவானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வெளியானது.
இதற்காக மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே நிலங்கள் தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டன. 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அவனியாபுரம் - பெருங்குடி அருகே நடைபெற்ற விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து இந்த மருத்துவமனைக்கு ரூ.1264 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், ஜப்பானைச் சேர்ந்த ஜைகா என்ற நிறுவனத்துடன் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப் பிரிவு ஒன்றை தொடங்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடியில் இருந்து ரூ.1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.
இதில் ஜைகா ரூ.1627.7 கோடியும், மீதத் தொகை மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவனை குறித்த வழக்கில், மத்திய அரசு அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதில், ‘மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1977.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் 8 மாத காலங்கள் ஆகும் என்பதால், இதன் கட்டுமானப் பணிகள் வருகிற 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும். மதுரை எய்ம்ஸ்க்கான மருத்துவப் படிப்பு ராமநாதபுரம் மருத்துவமனையின் தற்காலிகக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் நிர்வாக துணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் உத்தம்குமார் ரெட்டி, கோபால் ஜி தாக்குர் மற்றும் தீபக் பாஜ் ஆகிய 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீண் பவர் அளித்துள்ள பதில் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிரந்தரப் பேராசிரியர் பணியிடங்கள் 183, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 32 எனவும், முதல் மற்றும் 2ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக 8 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆகையால் ஒரு நிரந்தப் பணியிடம் கூட நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என மக்களவையின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற விவாதத்தின்போது இணையமைச்சர், தேசிய மருத்துவக் கழகம் 100 இடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 50 இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு, அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று, தற்போது அவர்கள் 2 ஆண்டுகளாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி, இந்தியா முழுவதும் தற்போதுள்ள 20 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சொந்தமாக இணைய தளம் இல்லாத ஒரே மருத்துவமனை மதுரை எய்ம்ஸ்தான். இவர்களால் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஒப்பந்தப் பேராசிரியர்கள் குறித்த விவரங்களும்கூட புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இணையதளத்தில்தான் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் வருகிற 2024ஆம் ஆண்டு தொடங்கி 2028ஆம் ஆண்டில் நிறைவடையும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 2028ஆம் ஆண்டுதான் முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்