மதுரை: நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜான்சிராணி பூங்கா அருகில் சைக்கிள் ரிக்ஷா வண்டிகளில் அதிமுக எழுச்சி மாநாடு விளம்பரப் பதாகையைப் பொருத்தி, தொழிலாளர்களுக்கு வேட்டி சட்டை வழங்கி அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “மதுரையின் மத்தியப் பகுதியில் அமைந்து உள்ள ஜான்சிராணி பூங்கா அருகே நாங்கள் இந்த நிகழ்ச்சி நடத்தக் காரணம், இங்கு தான் எம்ஜிஆர் மாநாடு நடத்தினார்.
எம்ஜிஆர் மன்றமும் இங்கு தான் உள்ளது. அதனால் தான் இந்த இடத்தை தேர்வு செய்தோம். ஓபிஎஸ் குறித்து நான் விமர்சித்த அந்த வார்த்தைகள் நான் சொன்னது அல்ல. இதற்கு முன்னால் பலரும் கட்சியை விட்டு வெளியேறிய போது ஜெயலலிதா குறிப்பிட்டது. அதிமுகவின் கோயிலுக்குள் இருக்கும் வரை அவர்கள் கல்லாக இருந்தாலும் மதிப்போம். கோயிலை விட்டு வெளியேறி விட்டால் அவர்களை மிதித்து விட்டுச் சென்று விடுவோம்.
கட்சியை விட்டு பலர் வெளியே சென்ற போது எம்ஜிஆர் தலைவர்களை நம்பி இந்த கட்சியை நான் நடத்தவில்லை. தொண்டர்களை நம்பித்தான் நடத்துகிறேன் என்றும் அவர்களால் மட்டுமே அதிமுக வளர்கிறது. அதனால் அது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறினார். அவரை பின்பற்றி அதிமுகவை வழி நடத்தியவர் ஜெயலலிதா. இதுதான் தற்போது எங்களது நிலைப்பாடும் கூட.
கொடநாடு வழக்கைத் தீவிரமாக விசாரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த வழக்கில் ஈடுபட்டது திமுகவினர் தான் என்பது அப்போதே தெரிய வந்தது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கொடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன?
இதையும் படிங்க: கூட்டாட்சி தத்துவத்தை பாஜக ஆட்சி கேலிக்கூத்தாக்கிவிட்டது - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர், Just like அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை? என்றுக் கூறினார்.
மேலும் பேசிய அவர், காவல் துறையினர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலை வாசி உள்ளிட்ட எல்லாமே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மதுரையில் வெயில் கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 108 டிகிரி அடித்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க: கருப்பு முருகானந்தம் மீதான வழக்கு தள்ளுபடி - மாமன்னன் படத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி!