தென்மாவட்டங்களில் முக்கிய மலர் சந்தையாக மதுரை மாட்டுத்தாவணி மலர் வணிக வளாகம் உள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் முதல் வெளிநாடுகள் வரை இங்கிருந்து குறிப்பிட்ட சில பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு தினமும் 10 டன்னுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்காக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும்.
கடந்த சில நாள்களாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்தது. வரத்துக் குறைவாக இருப்பதாலும், பண்டிகை நாள் என்பதாலும் கடந்த டிசம்பர் மாதம் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.4,000க்கு விற்பனையானது.
அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் ஒரு கிலோ மதுரை மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகின.
இந்நிலையில் தற்போது படிப்படியாகக் குறைந்து இன்று (ஜன.2) ரூ 2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப் பூ கிலோ 1,100 ரூபாயும், முல்லை கிலோ 1,000 ரூபாயும், சம்பங்கி கிலோ 120 ரூபாயும், செவ்வந்தி கிலோ 150 ரூபாயும், அரளி கிலோ 300 ரூபாயும், கனகாம்பரம் கிலோ 1,500 ரூபாயும், மெட்ராஸ் மல்லி கிலோ 600 ரூபாயும் என விற்பனையாகிறது.
வரும் வாரங்களில் பூக்களின் வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் கணிசமாக விலை குறையும் என பூ வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.