மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே. பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதியருக்கு ஏற்கனவே 8 வயதிலும், 3 வயதிலும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள தங்களது வீட்டிற்கு வந்த இந்தத் தம்பதியர், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி நேற்று நள்ளிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்து மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்துவந்த காவல் துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்திற்குப் புகார் மனு அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் உத்தப்பநாயக்கனூர் காவல் துறையினர் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதியிடம் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே இரு பெண் பிள்ளைகள் உள்ள சூழலில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கள்ளச்சந்தையில் இ-டிக்கெட்டுகள் விற்பனை செய்த இருவர் கைது!