மதுரைக்கு அருகேயுள்ள கிராமப் பகுதியில் வசித்துவருகின்ற தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நான்காவதாக அவர்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த பெண் குழந்தையை வறுமையின் காரணமாக வளர்க்க இயலாது என்று கூறி மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழுவைச் சேர்ந்த அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்தக் குழந்தையை வாங்கிய அலுவலர்கள் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கருமை பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து, அக்குழந்தை பராமரிக்கப்பட்டுவருகிறது.
மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டி ராஜாவிடம் இது குறித்து கேட்டபோது, குழந்தையை வேறு எதுவும் செய்துவிடாமல் உடனடியாகக் குழந்தை நல குழுவிடம் ஒப்படைத்ததைப் பாராட்டுவதாகவும், தங்களால் வளர்க்க முடியவில்லை என்றதும் பெற்றவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.
மதுரை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பெண் குழந்தை கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுபோன்று அல்லாமல் இந்தக் குழந்தையை வளர்க்க ஒப்படைத்ததை நாங்கள் வரவேற்கிறோம். குழந்தையை ஒப்படைத்த பெற்றோருக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டு குழந்தையை அழைத்துச் செல்ல விரும்பினால் தாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம். அவ்வாறு இல்லையேல் குழந்தையை தத்தெடுக்க விரும்புவோருக்கு அரசு விதிமுறைகளின்படி ஒப்படைப்போம் என்று கூறினார்.
இதையும் பார்க்க: பன்றி தாக்கியதில் நான்கு வயது சிறுவன் மரணம்!