சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில், காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி மூன்றாவது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை விசாரித்த நிலையில், தற்போது சிபிஐ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அலுவலர்கள் சேகரித்து விட்ட நிலையில், விசாரணையும் முடிவடைந்து உள்ளது. இந்நிலையில், தனக்கு பிணை வழங்கும் பட்சத்தில் தலைமறைவு போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடாமல், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு பிணை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக இன்று (அக்.,7) விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக, சிபிஐ பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் சம்பவம்: சிகிச்சையில் இருக்கும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை!