மதுரை காஞ்சரம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரும், அவரது மகள் பஞ்சுவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுப் பிழைப்பிற்காக வேறு தொழில் தெரியாத நிலையில் கஞ்சா வாங்கி விற்று வந்துள்ளனர்.
இந்தத் தொழிலால் தனது குடும்பமே சீரழிந்துவிட்டதுடன், தனது தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திருந்தி வாழவேண்டும் என்பதால் கஞ்சா விற்கும் தொழிலில் இருந்து அவர்கள் இருவரும் கடந்த மூன்று மாதங்களாக விலகி இருந்துள்ளனர். மேலும், இனி கஞ்சா வாங்கி விற்கக் கூடாது என்று முடிவெடுத்த பஞ்சு, தெருவோரம் இட்லி கடை நடத்திவந்துள்ளார்.
இதனிடையே, கடந்த வாரம் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீனாட்சியை அழைத்துச் சென்று, மீண்டும் கஞ்சா விற்பனை செய்து ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளனர்.
மேலும், அவர் மீது வழக்குப் போடாமலிருக்க 20,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கொடுக்கவில்லையென்றால் ஐந்து கிலோ கஞ்சா வைத்திருந்ததாக மீண்டும் வழக்குப் போடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து தன்னிடம் இருந்த பால்மாட்டினை விற்று அவர்கள் கேட்ட 20,000 ரூபாயை மீனாட்சி கொடுத்துள்ளார்.
அதன்பின் நேற்று முன்தினம் அதிகாலை நான்கு மணியளவில் ஊமச்சிகுளம் காவல் நிலையத்திலிருந்து மீனாட்சியை தேடிவந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனிடையே, தங்களை கஞ்சா விற்க வற்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரியம் மீனாட்சி புகாரளித்துள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் செல்ஃபோன் பறிப்பு - பங்கு பிரிக்க சண்டையிட்டு போலீசில் சிக்கிய பரிதாபம்!