மதுரை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு என்றாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம் எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்தும், வண்ண, வண்ண வான வேடிக்கைகளை வெடித்தும், புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் புத்தாடை உடுத்தியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றும் வழிபாட்டில் ஈடுபட்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். குறிப்பாக, இன்று (ஜன.1) அதிகாலை 4.30 மணி முதலே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரத் தொடங்கினர்.
2024ஆம் ஆண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான, வளமான ஆண்டாக அமைய வேண்டும் என ஒவ்வொருவரும் மீனாட்சியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் விடுமுறை நாளான இன்று மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட மக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்துள்ளனர்.
மேலும், ஐயப்ப பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வதற்காக சித்திரை வீதிகளில் உள்ள கோயிலின் நான்கு வாசல்களிலும் வரிசையில் காத்திருந்து உள்ளே செல்கின்றனர். கோயிலில் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டுச்சேலை சாத்தப்படும் என்பதால், அம்மனை தரிசனம் செய்யப் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறனர். மலர் அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், அம்மன் திரு உருவம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நோய்நொடியற்ற வாழ்வையும், அளவற்ற மகிழ்வையும் தருகின்ற வளமான ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமைய வேண்டும் என மீனாட்சியம்மனை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புத்தாண்டு 2024; பாணபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் விசேஷ திருக்கல்யாணம் கோலாகலம்!