மதுரை: கரூர் தாந்தோணியைச் சேர்ந்த குமார் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் சர்வே எண் 1954/1Bஇல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 40 அடி பொது சாலை அமைந்துள்ளது.
இந்த பொது சாலையை ஆக்கிரமித்து ராஜா என்ற தனி நபர் அனுமதியின்றி கட்டடம் கட்டி வருகிறார். எனவே 40 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருவதை நிறுத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்று (டிச.16) உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “வழக்கறிஞர் ஆணையம் அளித்துள்ள அறிக்கையிலும் முறையான அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் நகராட்சி ஆணையர் ஆகியோர் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடத்தை 2 வாரத்துக்குள் இடிக்க உத்தரவிடப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பழனி கோவில் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தள்ளுமுள்ளு.. கேமராவை பறிக்க முயன்ற திமுகவினரால் பதற்றம்!