கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடே முடங்கியுள்ளது. வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பொதுமக்கள் ஊரடங்கு சட்டத்தை மீறும் நடவடிக்கையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையை பொறுத்தவரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை வெளியில் செல்ல அனுமதி உள்ளது. அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் வெளியில் வரவேண்டும். ஆனால் இது பெரும்பாலான பகுதிகளில் கடைபிடிக்கப்படுவது இல்லை என்பது தெரியவந்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களை கைது செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதனையடுத்து மதுரையில் நெடுஞ்சாலை, தெருக்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர், சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரியும் பொதுமக்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல மோட்டார் சைக்கிளில் திரியும் வாகன ஓட்டிகள் கைது செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
மதுரையில், மார்ச் 23ஆம் தேதி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை நான்காயிரத்து 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் நான்காயிரத்து 687 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டாயிரத்து 720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 77 லட்சத்து 44 ஆயிரத்து 644 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஊரடங்கு சட்டத்தை மீறியதாக பிடிபட்ட வாகனங்களை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 16ஆம் தேதி 201 வாகனங்களும், 17ஆம் தேதி 72 வாகனங்களும் 18ஆம் தேதி 92 வாகனங்களும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் பார்க்க: கரோனா பரவலால் தள்ளாடும் வேளாண் துறை - உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வது எப்படி?