மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தொட்டப்பநாயக்கனூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவ்வப்போது மகப்பேறுக்கான மருத்துவப் பரிசோதனைகளை செய்து வந்தார்.
இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த நாளில் அவருக்கு பிரசவ வலி ஏற்படாத காரணத்தால் ரத்தம், சளி உள்ளிட்ட பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, அவருக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. திருப்பூரில் பணியாற்றும் அவரது கணவர் மூலமாக அவருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது என்பதும் தெரியவந்தது.
பின்னர், அவர்கள் இருவரும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பாக அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வந்துள்ளது. அறுவைச் சிகிச்சை மூலம் அப்பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதனைத்தொடர்ந்து அக்குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் ரத்தம், சளி உள்ளிட்ட பரிசோதனைகள் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்டன. அதில் அக்குழந்தை கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்படவில்லை என தெரியவந்தது. பிறகு, மீண்டும் 48 மணி நேரம் கழித்து மறுபடியும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் தொற்றுநோய் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, அக்குழந்தையின் பெற்றோர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் தொற்று இல்லாத அக்குழந்தை பெண்ணின் உறவினர்களிடம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தொற்று ஏற்படவில்லை என்பது தென் தமிழ்நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க : கரோனா தெருக்களைக் கண்காணிக்க ரோபா! - காவல் துறை அறிமுகம்