மதுரை: திருச்சி மாவட்டம், கஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி மாவட்டத்தில் அன்பில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கின்றன. கொள்ளிடம் ஆறு மத்திய மண்டலத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. கொள்ளிடத்தில் நீரோட்டம் நன்றாக உள்ள போது மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் அதிகளவில் கிடைக்கும்.
கொள்ளிடம் வறண்டு கிடக்கும் போது மின் மோட்டார்களின் நீர்வரத்து வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால், கொள்ளிடம் ஆற்றில் கடந்த 25 ஆண்டுகளாகவே மணல் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 2003-2017 ஆகிய 15 ஆண்டுகள் மிக மோசமான அளவில் மணல் கொள்ளை நடந்ததன் காரணமாக 90% கொள்ளிடம் அழிந்துவிட்டது.
அது மட்டுமல்லாமல் கொள்ளிடத்திலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலுள்ள சுமார் 30 நீரேற்று நிலையங்கள் கொள்ளிடத்தின் நிலத்தடி நீரைத் தினமும் கோடிக்கணக்கான லிட்டர் உறிஞ்சி எடுக்கின்றன. சுமார் 20 அடி ஆழத்தில் கிடைத்து வந்த தண்ணீர், இப்போது 70, 80 அடிகள் ஆழம் வரை சென்றுவிட்டது.
சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத் தேவைகளுக்காக மங்கம்மாள்புரம் எதிரே தென்கரை கோயிலடி பகுதியில் கதவணை அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்தும் செய்து தரவில்லை. இந்த நிலையில், விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அன்பில் பகுதியில் ஆழ்துளை குழாய்க் கிணறு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் செயல்.
எனவே, விவசாயப் பணிகளைப் பாதிக்கும் வகையில் அன்பில் பகுதியில் அமைக்கப்பட உள்ள ஆழ்துளைக் கிணறு பணிகளை நிறுத்தி தடை விதிக்க வேண்டும்"என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நீர் என்பது இனி வருங்காலத்திற்கு முக்கியமான பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. நீர் நிலை ஆதாரங்களைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயத் தேவைக்கும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் நீரை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது எனக் கருத்து தெரிவித்து, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யச் செய்ய உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மழையால் மண் சுவர் இடிந்து கோர விபத்து! பெண் பரிதாப பலி!