மதுரை மாவட்டம் திருநகரைச் சேர்ந்த நயினார் முகம்மது என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " அரசின் ஏழைகளுக்கான இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தின் கீழ், எனக்கு திருப்பரங்குன்றத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 2 சென்ட் வீட்டடி மனை கடந்த 2009ல் வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்டதை தொடர்ந்து அந்த நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறேன்.
சொத்து வரி உள்ளிட்டவற்றை மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறேன். என்னைப் போலவே 50 பேருக்கு அந்த பகுதியில் பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்றவர்கள் அனைவரும் அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். எங்களுக்கு வழங்கியது போக மீதம் இருந்த நிலத்தை, சிலர் எந்தவித அனுமதியும் இன்றி, சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். நாங்கள் முறையாக பட்டா பெற்று வீடு கட்டியுள்ளோம்.
இதை முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்கள் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று அத்துமீறி என் வீட்டிற்குள் நுழைந்து, வீட்டிலுள்ள பொருட்களை வெளியே எடுத்து போட்டதுடன், உடனடியாக எங்களை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டை இடித்து சேதப்படுத்தினர். எனவே, அத்துமீறி செயல்பட்ட அலுவலர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும், எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய இழப்பீடு வழங்கவும், எங்களது நிலத்தை மீட்டு திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமென" கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் அமர்வு, மனு தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், திருமங்கலம் ஆர்.டி.ஓ., மதுரை தெற்கு தாசில்தார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.