மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ராஜக்கூர் வரை செல்லும் மாநகரப் பேருந்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சீருடை அணிந்த இரண்டு மாணவர்கள் ஏறியுள்ளனர். அவர்களிடம் நடத்துநர் கணேசன் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கும்படி கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் பயணச்சீட்டு எடுக்க முடியாது என்று கூறி நடத்துநருடன் தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த பட்டாக்கத்தியால் நடத்துனரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த நடத்துனரை பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பயணச்சீட்டு கேட்ட நடத்துனரை மாணவர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் 'ரூட் தல' விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரையில் கல்லூரி மாணவர்கள் இருவர் பட்டாக்கத்தியால் பேருந்து நடத்துனரை வெட்டிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.