மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு அவரது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில், இன்று (அக். 30) ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நேற்று (அக். 29) இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு விருந்தினா் மாளிகையில் தங்கினார்.
இதன் தொடர்ச்சியாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவா் சிலைக்கு இன்று (அக் 30) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிலையின் கிழே வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவரின் உருவ படத்திற்கும் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து சிவகங்கை சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், கோரிப்பாளையம் மேம்பாலம் மற்றும் அப்போலோ சந்திப்பு உயா்மட்ட பாலம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதற்கு கடந்த ஏப்ரல் மாதம் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அனுமதியளித்து. அதை தொடர்ந்து அப்போலோ உயர்மட்ட மேம்பாலத்திற்கு ரூ.150.28 கோடி நிதியும், கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு ரூ.190.4 கோடி நிதியும் தேவை என தெரிவிக்கப்பட்டருந்த நிலையில் 2 மேம்பாலங்களுக்கும் ரூ.340 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை முடிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்பு மதுரை தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள மருதுபாண்டியா்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பலத்த பாதுகாப்பில் மதுரை மாநகரம்... என்ன காரணம் தெரியுமா?