மதுரை: உசிலம்பட்டி அருகே அமைந்துள்ளது வாலாந்தூர் கிராமம். இந்த கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் நான்கு வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலின் குடமுழுக்கு கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது இதற்கான 48 நாள் பூஜை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்றுடன் பூஜை முடிவுற்றது. இதில் ஒரு பிரிவினருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய நிலையில், மற்றொரு பிரிவினர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்தனர். இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்குள் விட மறுத்தனர். இதனால் இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது கோயில் தூணில் கட்டியிருந்த கம்புகளை எடுத்தி, இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையில் இந்த மோதலில் ஆறு பேர் காயமடைந்து, சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு- பாஜக, விசிக மோதல்