பொதுமக்களுக்கு கரோனா தொற்று வைரஸ் (COVID -19) நோய் பரவாமல் தடுப்பதற்காகக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதுரை மாநகரில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் மக்கள் அதிகம் பயணம் செய்துவருகிறார்கள்.
இதன்மூலம் அதிகமாகக் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவ வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தங்களது பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தங்களுடைய பாதுகாப்பிற்காகவும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காகவும் வெளி இடங்களுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்த்து வீட்டில் மட்டுமே இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரோனா வைரஸ் நம்மை பாதிக்காது என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்ட 14 நாள்களுக்குப் பிறகுதான் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்படுகிறது.
ஆகவே உடனடியாக நோய்தொற்று தெரிய வாய்ப்புக்கள் குறைவு. எனவே அவ்வாறு நோய்த்தொற்று இருப்பது தெரியாமலேயே வெளியில் அவர்கள் செல்வதன் மூலமாகப் பிறருக்கும் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆகவே யாரும் வெளியில் செல்ல வேண்டாம்.
அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட வேண்டும். மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால் நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கலாம். பொது இடங்களில் கூட்டம்கூட்டமாக நிற்பதால் சமூக இடைவெளி மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம். தங்களது வீட்டிற்கு உறவினர்களோ, நண்பர்களோ வருவதை அனுமதிக்கவும் வேண்டாம். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை குடும்பத்தில் உள்ள ஒரு நபர் மட்டும் வெளியில் சென்று வாங்கிவிட்டு உடனே வீட்டிற்குத் திரும்பவும் அவ்வாறு வெளியில் சென்றுவிட்டு வரும்போது கை, கால்களை நன்கு சுத்தம் செய்தபின் வீட்டிற்குள் அனுமதிக்கவும்.
இந்நிலையில் அனைவரும் கிருமி நாசினி சுத்திகரிப்புத் திரவம் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்பது மிகவும் அவசியமானது. கரோனா வைரஸ் மதுரை மாநகரில் பரவாமல் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமான ஒன்று.
பொதுமக்களாகிய உங்களைப் பாதுகாக்க வேண்டியது காவல் துறையின் மிக முக்கியமான கடமையாகும். காவல் ஆணையரின் உத்தரவுகளை அனைவரும் கடைப்பிடித்து நோய்த்தொற்று பரவாமல் அவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும்.
மேலும் பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளை 21 நாள்களுக்கு அனைவரும் கடைப்பிடிக்கும்படியும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்புத் தரும்படியும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26ஆக உயர்வு!