மதுரை: அன்பில் பகுதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அருண் நேரு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக கடந்த 9ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், பெண்கள், ஏழை எளியோர், நகைக் கடன், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடன், விவசாயக் கடன்கள் பெற்று பயன்பெற்று வரும் நிலையில், கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் லாபகரமாக, நிதி ஸ்திரத்தன்மையோடு இயங்கி வருவதாக கூறிய அமைச்சரே, சங்கங்களை கலைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கம் என்பது ஓர் தன்னாட்சி அமைப்பு, இவற்றை நிர்வகிக்க சட்டங்களும், நடைமுறைகளும் உள்ள போது, திடீரென தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை.
2018ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களில் புதிதாக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும், ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து கூட்டுறவு துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும். என கூறி வழக்கு விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு