மதுரை மாவட்டம், பெருங்குடி பகுதியிலுள்ள கஸ்தூரி பாய் நகரைச் சேர்ந்தவர் ஜோசப் கெளதம் (வயது 26). இவர் மதுரை விமான நிலையத்திலுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கிளையில் கள ஊழியராக பணிபுரிகிறார். கடந்த ஆறு நாட்களாக இவர் பணிக்கு வராததை அடுத்து, அந்நிறுவன மேலதிகாரி மகேஷ் என்பவர் இவரை அழைத்து விசாரித்தபோது, ஜோசப் கெளதம் ஏற்கனவே மற்றொரு மேலாளரான சக்திமுருகன் என்பவரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தொலைபேசி வாயிலாக விடுப்பு பெற்றுவிட்டது தெரியவந்தது.
இருப்பினும் தன்னிடம் முறையாக தகவல் சொல்லாத காரணத்தினால், மேலதிகாரி மகேஷ், பொது இடத்தில் ஜோசப் கெளதமை ஆபாசமாகத் திட்டியது மட்டுமின்றி, ”வேலையை விட்டு நின்று விடு, இல்லை என்றால் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப் கௌதம் பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, பெருங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், மகேஷ் பொது இடத்தில் ஆபாசமாகத் திட்டியது உறுதியானது மட்டுமின்றி, ஏற்கனவே மூன்று ஊழியர்களை இதே போல் மிரட்டல் விடுத்து பணி நீக்கம் செய்யத் தூண்டியதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது காவல் துறையினர் மகேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அட்டகாசமாக ஆம் ஆத்மியை வாழ்த்திய அமுல்!