மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த துரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கல்லணை கால்வாய் கரை, தஞ்சையையும் புதுக்கோட்டையும் வெட்டிக்காடு, ஈச்சங்கோட்டை பகுதி வழியாக இணைக்கிறது. வெட்டிக்காடிலிருந்து ஈச்சங்கோட்டை செல்லும் சாலை 12 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்தச் சாலையை பொது மக்கள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்
மேலும், சுமார் ஐம்பது கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்தச் சாலையை அன்றாட வாழ்க்கை பயணத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சாலையை பொதுமக்களின் வசதிக்காக அகலப்படுத்தக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கல்லணை கால்வாய் கரை சாலையை வெட்டிக்காடு முதல் ஈச்சங்கோட்டை வரை அகலப்படுத்தி, இருவழி சாலையாக மாற்ற உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்ததது. அப்போது, அரசு தரப்பில், " இந்த சாலையை அகலப்படுத்துவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் சாலையை அகலப்படுத்துவது அல்ல, அதற்காக நிதி ஒதுக்குவதே இந்த வழக்கை பொறுத்தவரை பிரச்னையாக உள்ளது. ஆகவே சாலையை அகலப்படுத்த விரைவாக முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: சிவகங்கை அகழாய்வு வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!