மதுரை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு குறிப்பாக மதுரைக்கு பெருமை சேர்த்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு, அவர் கல்வி பயின்ற லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் இன்று (ஆக.12) பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "ஒலிம்பிக் போட்டி என்பது உலக அளவில் விளையாட்டுத் துறையின் உச்சத்தை குறிக்கிறது. அதனடிப்படையில் ஒருவர் அப்போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெறுவது என்பதே அவரை பலருக்கு முன்னுதாரணம் ஆக்குகிறது. ரேவதியின் பங்களிப்பு தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
ரேவதிக்கு பாராட்டு
என்னைப் போன்ற நல்ல கல்வி, பொருளாதார சூழல், முன்னோர்களின் பின்புலம் வெகு சிலருக்கு தான் அமையும். நான் இன்று இருக்கும் நிலையை அடைவது என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரேவதி தனக்கான புதிய பாதையை வகுத்துக் கொண்டவர். மிக சாதாரண பின்புலத்தில் பிறந்து தற்போது அவர் அடைந்திருக்கும் உச்சம் மிகப் பெரியது.
ரேவதி தான் தொடங்கிய இடத்திலிருந்து இன்று அடைந்திருக்கும் உச்சம் என்பது அசாதாரணமானது, அதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன். அவரை இந்த நிலைக்கு உயர்த்த பாடுபட்ட அவரது பயிற்சியாளர், அவரது குடும்பம், நண்பர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
தமிழ்நாட்டில் ஒலிம்பிக் வீரர்கள்
அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், வெகு சிலரே இது போன்று விளையாட்டுத்துறையில் உச்சத்தை தொடுவது என்பது நமது சமூகத்தின் சரியான பிரதிபலிப்பாக இல்லை. நல்வாய்ப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் முந்தைய அரசாங்கங்களை விட ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு அதிகமான நிதி உதவி, அரசு வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளார்.
தொடர்ந்து நமது இளைஞர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும் அளவிற்கு நாம் பணியாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு