இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெள்ளை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பயமுறுத்தும் வகையிலிருந்தாலும், இந்த உண்மை நிலவரம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான நிதி நிர்வாகத்திற்கு வழிகோலும்.இந்த வெள்ளை அறிக்கையை வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கம் வரவேற்கிறது.
மாநில அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் பேருந்துகள் ஒரு கிமீ செல்வதற்கு சராசரியாக ரூ.96.75 செலவாகிறது. அதே போல, மின் விநியோக நிறுவனத்தின் விநியோகத்திற்கான செலவு ஒரு யூனிட்டிற்கு ரூ.9.06 ஆகிறது என்கிற அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்களை நிதியமைச்சர் கொடுத்திருக்கிறார்.
ஆனால் இவ்வளவு செலவு ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்து செலவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக இந்தக் கட்டணங்கள் வரவிருக்கின்ற தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தில் எதிரொலித்து விடக்கூடாது.
கடன் உள்ளிட்ட அரசு நிதியை கையாள்வதில் ஒளிவு மறைவற்ற முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வெள்ளை அறிக்கை உணர்த்துகிறது. ஒவ்வொரு வரவு செலவு திட்டத்தின் முதல் பகுதி சென்ற ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்காக செலவழித்த தொகை அவற்றின் நிலை குறித்து குறிப்பிட வேண்டும்.
சம்பளம் கொடுப்பதற்கோ மக்களுக்கு இலவசப்பொருட்கள் கொடுப்பதற்கோ ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கோ கடன் வாங்கக்கூடாது.
உற்பத்தித்திறனை உயர்த்தும் முதலீட்டுக்கு மட்டுமே கடன்
உற்பத்தித்திறனை உயர்த்தக்கூடிய முதலீடுகளுக்கு மட்டுமே கடன் வாங்கலாம் என்ற ஆரோக்கியமான நிதிக் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி மேலாண்மை முறைகளுடன் சமூக நீதியையும் இணைத்து மாநில அரசின் நிதி மேலாண்மை இருக்க வேண்டும்.
நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ள ஏழை, நடுத்தர மக்களை விட வசதி படைத்தவர்களுக்கு அதிகளவில் வரி விதிக்க வேண்டும் என்பது என்றுமே நினைவில் கொள்ள வேண்டிய வரி விதிப்புக் கொள்கையாகும். இந்தக் கொள்கை இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் போன்றது.
அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ள லஞ்ச லாவண்யங்களையும் அரசின் செயல்பாடுகளில் அரசியல், அதிகார வர்க்கத்தின் முறையற்ற தலையீடுகளையும் தவிர்க்காமல் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் எதையும் எதிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்கின்ற ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.
எனவே இக்கொள்கையை கடைப்பிடிப்பதற்கு முன்னர் நிர்வாக சீரமைப்புகள் தேவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை