மதுரை விமான நிலையத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். தென் தமிழ்நாட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் அலை வீசுகிறது. எனவே அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.
அரசியலில் இருந்து சசிகலா ஓய்வு பெற்றாலும், சித்தி பேச்சையே கேட்காமல் தேர்தலில் தினகரன் போட்டியிடுகிறார். ஆர்கே நகரில் வெற்றி பெற்ற தினகரன், அப்பகுதி மக்களுக்கு ஒரு நன்மைகூட செய்யவில்லை. மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட தைரியம் இல்லாமல்தான் வேறொரு தொகுதியில் போட்டியிடுகிறார்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துவிட்டார். தானாகவே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டு விடும். சசிகலா தற்போது அரசியல் வேண்டாம் என விலகிருக்கிறார். மீண்டும் அதிமுகவிற்கு வருவதாகக் கூறினாலும் அதிமுக தலைமைதான் அது குறித்து முடிவெடுக்கும்.
கமல் ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பதாக பரப்புரை செய்து வருகிறார். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீட்டில் 80 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியதற்கான காரணம் என்ன? தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், மீண்டும் ஊரடங்கை மக்கள் ஏற்க மாட்டார்கள், மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் களத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுகிறார். திமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் செய்தவர்களை ஜெயிலுக்கு அனுப்புவதாகக் கூறுகிறார். மக்களுக்கு யார் ஊழல் செய்தார்கள் எனத் தெரியும். கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, ஒரு புலியுடனோ சிங்கத்துடனோ கூட்டணி வைத்திருந்தால் பரவாயில்லை, ஒரு கழுதையுடன் கூட்டணி வைத்திருப்பது வேதனையளிக்கிறது” என்றார்.