மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், கொடைக்கானலில் உள்ள வில்பட்டி கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாகப் பங்களா கட்டி உள்ளனர். இந்த பங்களாவிற்கு கொடைக்கானல் நகராட்சியிடம் இருந்து விதித்துள்ள உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டி உள்ளனர்.
இதுபோன்று விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டடம் கட்டுவதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளது. மேலும் இந்த பங்களாக்களைக் கட்டுவதற்காகக் கனரக இயந்திரங்கள் மூலமாக மலையில் உள்ள பாறைகளை அகற்றி உள்ளனர்.
இது விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடைபெற்று உள்ளது. எனவே உரிய அனுமதி இல்லாமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மலைப்பகுதியில் கட்டடம் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், நடிகர் பாபி சிம்ஹா தனது தாயார் பெயரில் 2400 சதுர அடிக்குக் கட்டடம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு 4000 சதுர அடிக்கு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. தற்போது இரண்டு கட்டிடங்களின் கட்டுமான பணிகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக் குமார் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம் என கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த மனு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கில் ஜன.6ஆம் தேதி தீர்ப்பு..!