மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் திரியும் ஆடு, மாடுகளால் விபத்துகள் அதிகரிப்பு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மனித நேய மக்கள் கட்சி சேர்ந்த கலந்தர் ஆசிக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகளில் ஆடு மற்றும் மாடுகள் சாலைகளின் குறுக்கே திரிவதால் பொதுமக்கள் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போதும் வாகனங்கள் மீது மோதி வாகன ஓட்டிகள் பலத்த காயம் மற்றும் உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
ஆடு மற்றும் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் திறந்த வெளியில் கால்நடைகளை விடும் காரணத்தினால் அதிகளவு விபத்து மற்றும் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுகிறது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் நான்கு முதல் ஐந்து நபர்கள் மாடு முட்டி பலியாகி உள்ளனர். இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாடானை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பலர் மரணம் என வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
எனவே, கால்நடைகளால் சாலை விபத்து நடைபெறாத வகையில் சாலையில் ஆடு, மாடுகளை விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் திரியும் மாடுகளைப் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு இன்று (டிச.05) நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கால்நடைகளை உரிமையாளர்கள் சாலைகளில் விடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதனை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், கால்நடைகளைப் பறிமுதல் செய்து உள்ளாட்சி அமைப்புகள் ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவை முறையாக உள்ளாட்சி அமைப்புகள் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!