மதுரை: ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் வெகு விமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு பக்தர்களின்றி கோயில் வளாகத்திற்குள் அமைதியாக நடைபெற்றது.
அதேபோல தற்போதும் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நிகழாண்டிலும் சித்திரைத் திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் சித்திரைத் திருவிழா குறித்த நிகழ்ச்சி நிரலும் அழைப்பிதழும் வெளியாகி உள்ளன. அது குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம், "இதுவரை எந்த ஒரு அழைப்பிதழும் நிகழ்ச்சி நிரலும் கோயில் நிர்வாகம் வெளியிடவில்லை.
கோயில் நிர்வாகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் நிகழ்ச்சி நிரலுக்கும் அழைப்பிதழுக்கும் கோயில் நிர்வாகத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை.
மீனாட்சி அம்மன் கோயில் தொடர்பாகவும் திருவிழா தொடர்பாகவும் போலியான தகவல்களைச் சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கைவிடுத்துள்ளது.