கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இளநிலை உதவியாளர் பணியில் உள்ள எனக்கு உயர் அதிகாரியாக பணியாற்றியவர் கிருஷ்ணதாஸ். இவர் துணை பதிவாளராக அங்கு பணியாற்றினார். இவர் எனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்தார். அவரின் தவறான அணுகு முறைக்கு நான் மறுத்ததால் எனக்கும், எனது வேலைக்கும் பல்வேறு வழிகளில் இடையூறு செய்து வந்தார்.
நான் அவருக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தர மறுத்ததால் என் மீது ஒரே வருடத்தில் நான்கு முறை விளக்கம் கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது (Memo). இதனால் எனக்கு கிடைக்கவிருந்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு எதிராக விளக்கம் கோரி வழங்கப்பட்ட கடிதத்தைத் தடை செய்யக் கோரி, நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளேன்.
அதுமட்டுமின்றி பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எனக்கு தொந்தரவு அளித்த கிருஷ்ணதாஸ் மீது விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடைபெற வேண்டும்” என கோரியிருந்தார். இம்மனு நீதிபதி கிருஷ்ண ராமசாமி முன்பு இன்று (அக். 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆவினில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா?, அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தால் விசாகா குழுவின் முடிவுகளின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க, பால்வளத்துறை இயக்குநர்களுக்கு அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, இம்மனு தொடர்பாக ஆவின் பால்வளத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை: தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு