மதுரை மாநகரின் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மேலவெளி வீதியில், ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. சாலைப் போக்குவரத்து ஒழுங்கு காரணமாக இப்பகுதியில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்டர் மீடியன் என்றழைக்கப்படும் இந்தச் சாலை தடுப்பின் மீது போதையில் இருந்த குடிமகன் ஒருவர் ஏறி யோகாசனம் செய்வதைப் போன்று கை கால்களை நீட்டி சாவகாசமாக படுத்து உறங்கினார். இரு வழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே உயிருக்கு ஆபத்தான வகையிலும், தூக்கத்தில் புரண்டு சாலையில் விழும் நிலையிலும் இருந்த நபர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே யோகாசனம் செய்வதுபோல் படுத்திருந்தார்.
இந்நபரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரை திலகர் திடல் காவல் துறையினர் பாதுகாப்பு கருதி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து அந்த நபரை எழுப்பினர். உடனே விழித்துக்கொண்ட குடிமகன், தன்னை எழுப்பிய காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.
தொடர்ந்து காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி பேச்சு கொடுத்தவாறு வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதேபகுதியில் மற்றொரு போதை ஆசாமி ஒருவர் உச்சகட்ட போதையில் தள்ளாடியபடியே வந்து, திடீரென சாலையில் நின்று குத்து பாடல் பாடியவாறு நடனமாடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தார்.
இதனை அங்கிருந்தவர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றும் செய்தனர். இந்த வீடியோவும் தற்போது மதுரையில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடும் சிறுவன்: சிசிடிவி காட்சி வெளியீடு