மதுரை: மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகன். இவர் நேற்று (ஜன.29) இரவு சிம்மக்கல் சாலை வழியாக ரயில் நிலையம் நோக்கி காரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிருந்த செல்போன் கடை மீது மோதி நின்றது. இதில், கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. கடையின் முகப்பு பகுதியிலும் தீ பரவியது. இச்சம்பவத்தில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநர் மதுபோதையில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மாநகராட்சி உதவி பொறியாளர் மீது தாக்குதல் - திமுக எம்எல்ஏ சங்கர் மீது காவல்துறையில் புகார்