மதுரை: தூத்துக்குடியிலிருந்து ரயில் மூலம் டெல்லிக்குக் கடத்தி செல்ல இருந்த 2,400 மெட்ரிக் டன் ரேஷன் அரிசியை 2004ல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த வியாபாரி பிரதீப் மிட்டல், கோவில்பட்டி பழனிசெல்வம், தருமபுரி பூபாலன் மற்றும் பிலவேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடித்து இறுதி அறிக்கை தூத்துக்குடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களுக்கு ஏதும் தொடர்பு இல்லை என்றும், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் பிரதீப் மிட்டல் உள்ளிட்ட 4 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்து கடத்தல் ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாகச் சேர்த்து டெல்லி கொண்டு செல்கின்றனர். பின்னர் அதை பாலிஷ் செய்து விற்பனை செய்ய அரிசி கடத்தியுள்ளனர். இவர்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் நேரடி தொடர்பு உள்ளது எனவாதிடப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கில் விடுவிக்கக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: "ஆர்எஸ்எசின் பிரசார பீரங்கி ஆளுநர் ரவி" - துரை வைகோ!