கிருஷ்ணகிரி மாவட்டம் மோகன் ராவ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (36). பழையபேட்டையில் உள்ள நகைக்கடை பட்டறையில் பணிபுரிந்து வந்த அவர், கோடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவரிடம் நான்கு லட்ச ரூபாய்க்கான மாத சீட்டு கட்டிவந்தார்.
கரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த சுரேஷால் கடந்த ஆறு மாதங்களாக சீட்டுப் பணத்தை கட்ட முடியவில்லை. அதனால் கோபி செப்.22ஆம் தேதி அடியாள்களை வைத்து சுரேஷை தாக்கியும், சீட்டுப் பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சுரேஷின் பெற்றோரிடம் பல வெற்று ஆவணங்களில் கையெழுத்து பெற்று உள்ளார். அதனால் மனம் உடைந்த சுரேஷ், நேற்று இரவு செல்போன் வீடியோ பதிவிட்டு ஒன்றை வெளியிட்டு, அதில் தன்னை சீட்டுப்பணம் கேட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறினார். அதையடுத்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது அந்த காணொலி வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அவருக்கு மனைவி, 10 வயது மகன், 7 வயது மகள் ஸ்ரீஜா உள்ளனர். இதுகுறித்து அவரின் உறவினர்கள் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் தொழிலே இல்லாமல் வாழ்வாதாரம் இழந்த சுரேஷை அடியாட்களை வைத்து அடித்து பணம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை... பிள்ளைகளுடன் பெண் தற்கொலை முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!