கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த ஆஞ்சினம்மா (எ) மேரியம்மா(43), கடந்த செப்.5ஆம் தேதி மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலையாளியைப் பிடிக்க முடியாமல் மத்திகிரி போலீசார் திணறி வந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு வடமாநில இளைஞரை குஜராத்தில் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது, தமிழ்நாடு போலீஸ்.
கொலையாளி சிக்கியது எப்படி?: கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள வீட்டில் ஆஞ்சினம்மா என்கிற மேரியம்மா உயிரிழந்த அன்று அருகே இருந்த 2 வீடுகளில் 3 செல்போன்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட செல்போன்களின் IMEI நம்பரைக் கொண்டு போலீசார் டிராக் செய்ததில், அந்த செல்போன்கள் ஒடிசா மாநிலத்தில் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குஜராத்தில் கைது: இதைத்தொடர்ந்து, கொலையான பெண்ணின் வீட்டிற்கு அருகே உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோமு (எ) பிரமோத் ஜனா(22) என்ற இளைஞரே கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்க மத்திகிரி எஸ்ஐ சிற்றரசு தலைமையிலான போலீசார் ஒடிசா சென்றபோது, கொலையாளி குஜராத் தப்பியதால் போலீசாரின் நீண்ட தேடுதலுக்குப் பின் குஜராத் மோர்பி என்னும் பகுதியில் இருந்த பிரமோத் ஜனாவை போலீசார் கைது செய்து இன்று (டிச.7) தமிழ்நாடு அழைத்து வந்தனர்.
ஒடிசா இளைஞருக்கு சிறை: ஓசூர் வந்த கொலையாளியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 22 வயதான தானும், 43 வயதான ஆஞ்சினம்மா என்ற அப்பெண்ணும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், இதனிடையே அந்தப் பெண்ணிற்கு மற்றொரு நபருடனும் தொடர்பு இருந்ததால் இதனைக் கேட்டபோது, ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்: இவ்வாறு தமிழ்நாட்டில் பெண்ணை படுகொலை செய்த இளைஞரை ஒடிசா, குஜராத் என பல மாநிலங்களில் அலைந்து கண்டறிந்து, அவரை முறையாக அப்பகுதியிலுள்ள நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கைது செய்து தமிழ்நாடு கொண்டுவந்த போலீசாருக்கு அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உட்பட பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளா NIT மாணவர் மரணம்.. மகன் கொல்லப்பட்டதாக தந்தை புகார்!