கிருஷ்ணகிரி: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்தது. இதையடுத்து, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டிவருகிறது. அந்தவகையில், செயல்படுத்தப்படவுள்ள மகத்தான ஒரு திட்டம்தான் 'மக்களை தேடி மருத்துவம்'.
இதன் நோக்கமே பொதுமக்கள் எளிதில் மருத்துவப் பயன்களைப் பெறுவதாகும். மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சாமனப்பள்ளியில் ஒரு பெண்ணுக்கு அவரது வீட்டுக்கே சென்று வழங்கி தொடங்கிவைத்தார். இத்திட்டத்திற்காகக் கூடுதலாக 1,000 செவிலியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகுக்கே முன்னோடித் திட்டம்
முன்னதாக சில நாள்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுவரும் தாய்-சேய் நல மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுசெய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ஆகஸ்ட் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இந்தத் திட்டம் உலகத்துக்கே ஒரு முன்னோடியான திட்டமாகத் தமிழ்நாட்டில் அமையவிருக்கிறது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், இன்று காலை மா. சுப்பிரமணியன் அவரது ட்விட்டர் பக்கத்தில், "மக்களை தேடி மருத்துவம் மகத்தான திட்டம் முதலமைச்சரால் இன்று தொடக்கம்... உங்க வீட்டைத் தேடி வராங்க...வராங்க..." எனப் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் ஸ்டாலின்
இத்திட்டத்திற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மா. சுப்பிரமணியன் தனது ட்வீட்டில், "மக்களை தேடி மருத்துவம் என்னும் மகத்தான திட்டத்திற்கு அரசாணை வெளியீடு" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதனிடையே, இத்திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக நேற்று மாலையே மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி வந்தடைந்தார்.
இதையும் படிங்க: மக்களைத் தேடி மருத்துவம்: சிவகார்த்திகேயன் பங்கேற்ற விழிப்புணர்வு பாடல்